புதுக்கோட்டை: கே.புதுப்பட்டி அடுத்த கரையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவர், கடந்த 2021ஆம் ஆண்டு நம்பூரணிப்பட்டியைச் சேர்ந்த நிவேதா (வயது 25) என்கிற பெண்ணை, திருமணம் செய்து உள்ளார். இந்நிலையில், திருமணமாகி, 8 மாதங்களில் மோகன் - நிவேதா மற்றும் நிவேதாவின் பெற்றோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனை அடுத்து, இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், மோகனை பிரிந்து செல்லும் பொழுது கர்ப்பமாக இருந்த நிவேதாவுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. பின்னர் 3 ஆண்டுகளுக்கு பிறகு மோகன், வைரிவயல் கிராமத்தை சேர்ந்த செண்பகவள்ளி (எ) கிருத்திகாவை இரண்டாவதாக திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்து உள்ளார்.
அப்போது, முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இருந்ததால், முறைப்படி திருமணம் செய்ய முடியாமல் போனதாக கூறப்படுகிறது. பின்னர் மோகனும், கிருத்திகாவும் திருமணத்தை மீறிய உறவில் கடந்த ஓராண்டாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 12) மோகனின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் மோகன், கிருத்திகா மற்றும் பச்சிளம் குழந்தை மட்டும் இருந்து உள்ளனர். அப்போது, அறையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதாகக் கூறி மோகன் மற்றும் கிருத்திகா குழந்தையை தேடி உள்ளனர்.
பின்னர், வீட்டின் மொட்டை மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில், கழுத்தில் காயங்களுடன் கிடந்த குழந்தையை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கே.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, குழந்தையின் உடலை கைபற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து, குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மோகன் மற்றும் கிருத்திகா மீது சந்தேகமடைந்து போலீசார், இருவரிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அதில், மோகன் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததும், கிருத்திகா குழந்தையின் உடலை வீட்டின் மேல்நிலை தண்ணீர் தொட்டியில் வீசியதும் அம்பலமானது.
இதனையடுத்து போலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்கள், மோகனின் முதல் மனைவி நிவேதா விவாகரத்து வழக்கில் தங்களுக்கு பிறந்த குழந்தையை காரணம் காட்டி, வழக்கில் விவகாரத்து கிடைக்காமல் போகலாம் என்பதாலும், மோகன் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்திலும் குழந்தையை கொன்றதாக கூறியுள்ளனர்.
மேலும், இந்த குற்றத்தை மோகனின் முதல் மனைவி நிவேதிதாவின் தந்தையை மீது சுமத்த திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை கொன்று தண்ணீர் தோட்டியில் வீசி நாடகமாடிய, மோகன் மற்றும் கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தேனி கேரள எல்லையில் எரிந்த நிலையில் பாதிரியாரின் உடல் கண்டெடுப்பு!