புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ளது குளமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவிற்காக காகிதப்பூ மாலை தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். குளமங்கலத்திலுள்ள அய்யனார் கோயில் குதிரைச் சிலையானது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலையாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயில் திருவிழா ஆண்டுதோறும் மாசிமாதம் பவுர்ணமி அன்று இரண்டு நாள்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் மார்ச் 8, 9 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களுக்கு இங்குள்ள குதிரைச் சிலைக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஜிகினாவால் செய்யப்பட்ட மாலைகளைப் பல்லாயிரக்கணக்கில் செலவுசெய்து வாகனங்களில் ஊர்வலமாகக் கொண்டுவந்து போடுவார்கள்.
இப்போது பிளாஸ்டிக்கிற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், குளமங்கலம் கிராமத்தின் சார்பிலும் ஜிகினா மாலைக்குப் பதிலாக காகிதப்பூவைக் கொண்டுதான் மாலை அணிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கிணங்க பக்தர்கள் இந்த ஆண்டு காகிதப்பூ செய்து தரவேண்டும் என்று ஆர்டர்கள் செய்துள்ளனர்.
இந்த மாலைகளைத் தயாரிப்பதற்கென்று குளமங்கலம், பனங்குளம், ஆவணத்தான்கோட்டை, பாண்டிக்குடி, கீரமங்கலம் போன்ற ஊர்களில் நூற்றுக்கணக்கானோர் மாலை கட்டும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து கீரமங்கலத்தைச் சேர்ந்த துரை என்பவர் கூறுகையில், ”20 ஆண்டுகளுக்கும் மேல் இந்தத் தொழிலைச் செய்துவருகிறேன். இந்த ஆண்டு பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜிகினாப் பேப்பருக்குப் பதிலாக காகிதப்பூவால் மாலைகள் தயாரித்து வருகிறோம். திருவிழா தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பணியைத் தொடங்கி விடுவோம். மாலை கட்டும்போது அந்தக் கிராமத்து மக்களைப் போலவே நாங்களும் விரதத்தில் ஈடுபடுவோம்.
ஆண்டுதோறும் 150 முதல் 200 மாலைகள் வரை ஆர்டர்கள் கிடைக்கும். எதற்கும் இருக்கட்டும் என்று கருதி கூடுதலாக 25 மாலைகள் வரை கட்டி தயார்நிலையில் வைத்திருப்போம். அதேபோல் மாலை கட்டியவுடன் வந்து யாரும் எடுத்துச் செல்ல மாட்டார்கள். திருவிழாவிற்கு முதல் நாள்தான் வந்து ஏற்றிச் செல்வார்கள். இந்த மாலை கட்டுவதற்கு 3,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை செலவாகிறது. அதற்கேற்றாற்போல் மாலைக்கு விலை வைத்து விற்றுவிடுவோம். உரிய பணம் கொடுத்து ஏற்றிச் சென்று விடுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை