அன்னவாசலை அடுத்த தாண்றீஸ்வரத்தில் உள்ள சத்ரு சம்கார மூர்த்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அதற்கான பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் டெய்சி குமார், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் உறுதி மொழியுடன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 800 காளைகளை, கால்நடைத் துறை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வாடிவாசலுக்குள் அனுப்பினர். அதே போல் 180 மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
![தான்றீஸ்வரம் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டி 27 பேர் காயம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-03-jallikattu-image-scr-7204435_12032020184425_1203f_1584018865_70.jpg)
வாடிவாசலில் முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து வந்து நிறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அன்னவாசல், சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளில், பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், குத்துவிளக்கு, ஹாட்பாக்ஸ், பிளாஸ்டிக் சேர், வெள்ளி பாத்திரம், வெள்ளி நாணயம், ரொக்கப்பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டித் தள்ளியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், செங்கப்பட்டி சுப்பையா (45), ராப்பூசல் வினோத் (22), ஆணைப்பட்டி சொக்கையா (45) ஆகிய 3 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விழாவில் இலுப்பூர் வட்டாட்சியர் முருகேசன், ஒன்றிய பெருந்தலைவர் ராமசாமி, முக்கியஸ்தர் தணிக்கொடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டி, நிபந்தனைகளின்படி முறையாக நடைபெறுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர்.
![தான்றீஸ்வரம் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டி 27 பேர் காயம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-03-jallikattu-image-scr-7204435_12032020184425_1203f_1584018865_856.jpg)
ஜல்லிக்கட்டை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் தாண்றீஸ்வர சுற்றுவட்டார பொதுமக்கள் செய்திருந்தனர். தான்றீஸ்வரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறிய அளவிளான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் புகைப்படங்கள், வீடியோ எடுப்பதற்காக செய்தியாளர்கள் மேடையில் ஏறியபோது, திடீரென மேடை சரிந்து விழுந்தது. இதில் 3 பேரும் மேடையில் இருந்து கீழே விழுந்து லேசான காயங்களுடன் தப்பினர்.