புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து வெள்ளாட்டுமங்கலம் வழியாக நிலையூர், மணமேல்குடி செல்லும் சாலையில் புதிதாக பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலத்திற்கான கட்டுமானப் பணி நடைபெறும்போது அருகிலேயே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக பாலம், கடந்த இரண்டு நாள்களாக புரெவி புயலால் கொட்டி தீர்த்த மழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழிப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்குச் செல்ல வேண்டும் எனில் எட்டு கிலோமீட்டர்வரை சுற்றி செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். உடனடியாக அரசு இந்த புதிய பால பணிகளை முடித்து திறக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர்.
தற்காலிக பாலத்தில் தண்ணீர் அபாய நிலையை தாண்டி வருவதால் அப்பகுதி இளைஞர்கள் கம்புகளை வைத்து யாரும் செல்லாதவாறு அவ்வழியை அடைத்தனர். அத்தியாவசிய பொருள்களை வாங்கக்கூட 8 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழைக்காலம் முடிந்த பின்னராவது புதிய பாலத்தை அரசு திறக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.