அகில இந்திய அளவில் 89 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவன் விவேக், அகில இந்திய அளவில் 65வது இடத்தையும், தமிழக அளவில் 7-வது இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் விவேக் உடன் சேர்த்து மொத்தம் 14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மாணவர் விவேக் கூறியதாவது, "எனது சொந்த ஊர் அறந்தாங்கி அருகே உள்ள காரக்கோட்டை. எங்கள் குடும்பம் விவசாய குடும்பமாகும். எனது தந்தை பழனி சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். எனது சகோதரியும், நானும் படிப்பில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நன்றாக படித்து வந்தோம். சமீபத்தில்தான் அவருக்கு வேளாண்மை பொறியியல் துறையில் பணி கிடைத்தது. நான் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகளில் 12 வரை படித்துவிட்டு, திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன்.
தொடர்ந்து ஐ.எப்.எஸ் தேர்வு எழுதி சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக படித்தேன். இதனைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 10-ம் தேதி நடந்த ஐ.எப்.எஸ் தேர்வு எழுதினேன். தொடர்ந்து ஜனவரி மாதம் 28-ந் தேதி புதுடெல்லியில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில் கூறினேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், எனக்கு வனப்பணி பிடித்திருந்தது. அதனால் தீவிரமாக படித்து ஐ.எப்.எஸ்-ல் தேர்ச்சி பெற்றுள்ளேன். என் படிப்பதற்கு ஊக்கமும், உறுதுணையுமாக இருந்த எனது குடும்பத்தாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு என்ன ஊரில் பணி ஒதுக்கினாலும் அவற்றை திறம்பட செய்வேன்." என்று கூறினார்.