திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தி அதிமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச் செல்வன், "திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை அதிமுக மீது சுமத்தி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை. ஸ்டாலின் பேசுவதற்கு வேறு ஏதும் விஷயம் இல்லை என்பதால் அதிமுக அரசின் சாதனைகளை மறைப்பதற்காக தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து மக்களை குழப்புகிறார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, பொங்கல் பண்டிகைக்கு பரிசுப்பெட்டகம் வழங்கியது, கரோனா தடுப்பு ஊசி இலவசம், குடிமராமத்து திட்டங்கள் என அனைத்தும் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இதை சகித்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஸ்டாலின் நிலை இல்லாதவராக இருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தவறாக கிராமசபைக் கூட்டங்களில் தெரிவித்து விட்டு அதை மீண்டும் அவரே மாற்றி பேசுகிறார்.
குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஸ்டாலின் முதலமைச்சராக ஆசைப்படுகிறார். கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு மட்டுமல்ல, பிற மாநிலங்கள் மட்டுமல்ல உலகமே வியந்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசைப் பாராட்டி வருகிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது என்று அழகிரி உண்மையை கூறி வருகிறார். தமிழ்நாடு அரசு மீது கூறிவரும் குற்றச்சாட்டு குறித்து நேருக்குநேர் விவாதிக்க தயாரா என்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து கூறிவரும் நிலையில் ஸ்டாலின் பயந்துபோய் பல்வேறு நிபந்தனைகளை விதித்து புறமுதுகிட்டு ஓடி வருகிறார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூந்தமல்லியில் வேலை வாங்கி தருவதாக 24 லட்சம் மோசடி!