கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு, 50 நாட்களுக்கும் மேல் கடந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அரசு மதுபானக் கடை திறக்க மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில், மது வாங்க வந்த இரண்டு நபர்கள் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் சந்தேகமடைந்த டாஸ்மாக் ஊழியர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவலளித்தார்.
இதனையடுத்து அந்த இருநபர்கள் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்ததில், அது கள்ளநோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அந்த நபர்களைப் பிடித்த, காவல் துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மணிகண்டன், சந்தோஷ்குமார், சுரேஷ்குமார், ராமச்சந்திரன், முகமது இப்ராகிம், முகமது நசுருதீன் ஆகிய ஆறு பேர் கொண்ட குழு கள்ளநோட்டுக்களை அச்சிட்டு, அதனை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
பின் அவர்களைக் கைது செய்த காவல் துறை, அவர்களிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2000, 500, 200, 100 ரூபாய் கள்ளநோட்டுக்களையும், அதனை அச்சடிக்கப் பயன்படுத்திய அச்சு இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இக்குழுவினர் அச்சடித்த கள்ளநோட்டுக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ளதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் மாவட்டத்திலுள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:பிரபல பெண் கள்ளச்சாராய வியாபாரி கைது - 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சம் பறிமுதல்!