புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி, தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எல். முருகன், "தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென டெல்லி, சென்னைவரை சென்று அலுவலர்களை சந்திப்பது மிகவும் கஷ்டமானது. அதனால் நேரடியாக பொது மக்களை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்து இதுவரை மாவட்டவாரியாக 250 மாவட்டங்களில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
எஸ்டி பிரிவினருக்கான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். அதேபோல் நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும். வீடுகள் இல்லாதவர்களுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 5,900 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்வச் பாரத் மத்திய அரசு திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலுமே கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் பிரச்னை தமிழ்நாட்டை பொறுத்தவரை எல்லா மாவட்டங்களிலும் இருந்துவருகிறது. அனைத்து மாவட்ட துணை ஆட்சியருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது சாதி சான்றிதழ் கேட்டு பதிவு செய்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களை நடத்தி வழங்கப்படாமல் உள்ள சாதி சான்றிதழ் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கே வழங்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உயிரிழந்தவர்களை புதைப்பதற்காக அனைத்து சமூகத்திற்கும் ஒரே சுடுகாடுதான் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அவரவர் வசதிக்கேற்ப சாதி ரீதியாக சுடுகாடுகள் உள்ளன. இதனை அகற்றிவிட்டு அனைத்து சமுதாயத்திற்கும் ஒரே சுடுகாடுதான் இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.