புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட காந்தி நகர் பகுதியில், பத்து வீதிகள் வரை உள்ளன. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி சார்பாக குழாய் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் கலங்கலாகவும், கழிவுநீர் கலந்து வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார் மனு மீது நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இன்று (மார்ச்3) காலை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்கள் மற்றும் கழிவுநீர் கலந்த குடிநீருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஒரு மணி நேரம் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:கழிவுநீர் மறுசுழற்சியில் அசத்தும் சென்ட்ரல் ரயில் நிலையம்