தற்போது மாம்பழ சீசன் என்பதை அனைவரும் அறிவோம். நாம் உண்ணும் மாம்பழங்கள் புதியதாய் விளைவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். மரத்திலேயே பழுத்து கிடைக்கக்கூடிய மாம்பழத்திற்கு என்றுமே அதிக கிராக்கி உண்டு. அதேபோல் காய் முற்றிய நிலையில் மாங்காய்களை பறித்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்து பழுக்க வைப்பதும் உண்டு.
அதேவேளையில், மாங்காய்களை பழுக்க வைப்பதற்காக வியாபாரிகள் கார்பனேட் என்று சொல்லப்படும் ரசாயனக் கற்களை பயன்படுத்துவார்கள். அவ்வாறு ரசாயனக் கற்களை வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்கள் மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இனம் புரியாத, பல நோய்களை ஏற்படுத்தும். காய்ச்சல் போன்ற நோய்களை உருவாக்கும்.
இதனால் சுகாதார அதிகாரிகள் இதுபோன்ற காலகட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை அள்ளிச் செல்வர். இதற்கு பயந்தே மாம்பழ வியாபாரிகள் இப்போதெல்லாம் மாங்காய்களை பறித்து லாரியில் ஏற்றி ரசாயன கலவையை தெளித்து விடுகிறார்கள்.
ஆனால் உண்மையிலேயே இது போன்ற எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாத வண்ணம், மரத்திலே பழுத்த பழங்களுக்கு இணையான சுவையுடனும் குணத்துடனும் மாம்பழங்களை இயற்கையாக பழுக்க வைக்க ஒரு வழியுண்டு. அது தான் "மாம்பழக் கொன்றை”
மாம்பழக் கொன்றை என்பது ஒரு வகை பூ. இந்தப் பூக்கள் மாம்பழ சீசன் ஆன, மே மாதத்தில் பூக்கக் கூடிய மஞ்சள் நிறமுடைய பூ ஆகும். மாம்பழங்களை பழுக்க வைக்க அந்த காலம் முதலே, தொன்றுதொட்டு இந்தப் பூக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த மாம்பழக் கொன்றை பூ மரத்தின் இலைகளையோ அல்லது பூக்களையோ மண்பானையில் போட்டு வைத்து அதற்குள் மாங்காய்களை அடுக்கி வைத்தால் போதும், மாம்பழங்கள் பழுத்துவிடும். நன்கு முற்றிய மாங்காய்கள் முதலில் பழுத்து விடும். முற்றாத காய்கள் ஓரிரு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக பழுக்கத் தொடங்கும்.
முற்றிய மாங்காய்கள் பழக்கும்போது எடுத்துப் பார்த்தால், மரத்திலேயே பழுத்த பழம் என்ன சுவை இருக்குமோ அதே சுவை இதிலும் இருக்கும். அதுபோக, எந்த ஒரு பக்கவிளைவுகளும் இருக்காது. மாமரம் காய்த்துப் பழுக்கும் இதே காலகட்டத்தில், மாம்பழக் கொன்றையும் பூப்பது, இதன் தனிச்சிறப்பாகும்.
இன்றைய ரசாயனக் கலவைகளின் காலக்கட்டத்தில், இந்த மரம் இருப்பது யாருக்குமே தெரியாத ஒன்றாகிவிட்டது. சாலையோரங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த மாம்பழக் கொன்றை பூக்கள், பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன. தற்போது பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.
இது போன்று இயற்கை முறையில் பூக்களை உபயோகித்து மாம்பழங்களைப் பழுக்க வைத்து, ரசாயனம் கலந்த பழங்களை உண்பதைத் தவிர்ப்பதால், பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
இதையும் படிங்க: உலக நாடுகளின் மாம்பழங்களை தோட்டத்தில் வளர்க்கும் குஜராத் விவசாயி!