புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ரஹ்மத் நகரில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள், கடல் பல்லிகள் பதுக்கிவைத்திருப்பதாக திருப்புனவாசல் கடலோரக் காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோரக் காவல் படையினர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ரஹ்மத் நகரில் ஹாஜி அலி என்பவரது வீட்டின் பின்புறம் சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு ஆறு சாக்கு மூட்டைகளில் 32 கிலோ எடை கொண்ட 18 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட கடல் பல்லிகள் பதுக்கிவைத்திருந்து கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சமாகும்.
இதனை பதுக்கிவைத்திருந்தவர்கள் வீட்டிலிருந்து தப்பியோடினர். பின்னர், கைப்பற்றப்பட்ட கடல் பல்லிகள் அறந்தாங்கி வனச்சரக அலுவலர் ராஜசேகரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தப்பியோடிவர்களைக் கடலோரக் காவல் படையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க : பதுக்கப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - குடோனுக்குச் சீல்!