புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 950 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 45 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் 400க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இதனையடுத்து பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே கருத்தொற்றுமை இல்லாத நிலையில், பாகுபாடும் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியர்களை மிரட்டுவதாகவும், சாதிப் பாகுபாடு நிலை வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து கறம்பக்குடி தாசில்தாரான ராமசாமி, காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன், மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் எதிரொலியாக ஆசிரியர்கள் பாலச்சந்திரன், சிவக்குமார் ஆகிய இருவரும் அரிமளம் மற்றும் கட்டுமாவடி பள்ளிகளில் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
இதை அறிந்த மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்து வகுப்புகளிலிருந்து வெளியேறினர். இது குறித்து தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் பள்ளிக்குச் சென்று மாணவர்களை சமாதானப்படுத்தினார். இந்நிலையில், இன்று காலை காலாண்டுத் தேர்வு நடக்கவிருந்த நிலையில், மேல்நிலை வகுப்பு மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தேர்வை புறக்கணித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில், தலைமை ஆசிரியர் மதியழகன் மற்றும் சக ஆசிரியர்களுக்கு கருத்து வேறுபாட்டால் பள்ளியில் அடிக்கடி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இடையே மோதல் நடைபெற்று வந்தது என்றும், இதற்கு எந்த தொடர்பும் இல்லாத பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வந்த வேளாண் அறிவியல் ஆசிரியர் சிவகுமார் மற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் ஆகிய இருவரையும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததை ரத்து செய்து, மீண்டும் மழையூர் பள்ளிக்கு பணியமர்த்த வேண்டும் என்றும், பள்ளித் தலைமை ஆசிரியர் மதியழகன் மாணவ மாணவியர்களுக்கு வரவேண்டிய ஊக்கத் தொகைகளை கையாடல் செய்து வருவதாகவும், அதனைப் பெற்று தர வேண்டியும் கையாடல் செய்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேர்வினை புறக்கணித்து மனு கொடுத்தனர்.
பள்ளி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததைத் தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை பள்ளிக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக பள்ளியில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்த பின்னரே, பள்ளி மாணவ மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு சென்றனர்.
முன்னதாக இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் தேர்வுக்கு வராத மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து புதுக்கோட்டை வந்துவிட்டு திரும்பிய மாணவர்களில் சுமார் 40 பேர் மதியம் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பள்ளியில் விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!