புதுக்கோட்டை: கடியாப்பட்டியில் உள்ள உலகப்பர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 1990-91ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாகச் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து முன்னாள் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு பந்தல் அமைத்து விழா நடைபெறும் இடம் போல் பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதில் முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதில் மாணவர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்.
பின்னர் முன்னாள் மாணவர்கள் பள்ளியில் டிஜிட்டல் திரை அமைத்து பாட்டு பாடி நடனமாடி மகிழ்ச்சியடைந்தனர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களது குடும்பம், குடும்ப உறுப்பினர்கள் தங்களது தற்போதைய தொழில் உள்ளிட்டவர்களைக் கூறினார்கள். இதைக் கேட்ட ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் மிகுந்த உயர்ந்த நிலையை அடைந்ததைக் கண்டு மனம் மகிழ்வதாகவும் 31 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களை நினைவில் வைத்து தங்களை அழைத்து இதுபோன்ற ஒரு நிகழ்வை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினர்.
மேலும் இதில் பேசிய ஆசிரியர்கள் தங்கள் சொந்த குழந்தைகள் வளர்ச்சியை விட தாங்கள் பெறாத குழந்தைகளான மாணவர்களின் வளர்ச்சியைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சைவ மற்றும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தீண்டாமை: புதுக்கோட்டை கலெக்டர் உட்பட மூவர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு