புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்த மிதுன்கிஷோர், அரவிந்த், பரத் ஆகிய மூன்று இளைஞர்கள் கடந்த ஜூலை 11ஆம் தேதி, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உடனடியாக உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரணம் வழங்கிடவும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்குத் தனது, இரங்கலைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, அவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியினை நேற்று (ஜூலை17) வழங்கினார்.