சென்னை சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை கண்காணிப்பாளராக உள்ளவர் பாண்டியன். சென்னையில் புதிதாக கட்டப்படும் தொழில் நிறுவனங்களுக்குத் தடையில்லா சான்று வழங்க பாண்டியன், பல லட்சம் ரூபாய் கையூட்டு வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தொடர் புகார்கள் வந்தன.
இதனடிப்படையில், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இயங்கிவரும் அலுவலகம், கண்காணிப்பாளர் பாண்டியனின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையில், 18 இடங்களில் வாங்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.1.37 கோடி ரொக்கம், வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத்தொகையாக வைத்திருந்த ரூ.37 லட்சம், 1.22 கோடி மதிப்பிலான 3.081 கிலோ தங்கம், 1.51 லட்சம் மதிப்பிலான 3.343 கிலோ வெள்ளி, 5.40 லட்சம் மதிப்பிலான 10.52 கேரட் வைர நகைகள், ஒரு சொகுசு கார், இரண்டு பைக்குகள் என மொத்தம் 10 கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 720 ரூபாய்க்கான சொத்துகள் பறிமுதல்செய்யப்பட்டன.
இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட கண்காணிப்பாளர் பாண்டியன் தற்போது பிணையில் விடுதலையாகியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கும் அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (ஜன. 11) விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட விசாரணையின்போது, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த விசாரணை பிற்பகல் 11 மணியளவில் முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையை முடித்துக்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், அங்கிருந்து பறிமுதல்செய்யப்பட்ட பல ஆவணங்களை எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமாக 8 லட்சம் கரோனா தடுப்பூசிகள்