புதுக்கோட்டை: கறம்பக்குடி தாலுக்காவில் உள்ள அம்புகோவில் ஊராட்சிக்கு உட்பட்டது கண்டியன்பட்டி ஆதிதிராவிடர் காலனி. இங்கிருந்து கந்தர்வகோட்டை தாலுகா, கல்லாக்கோட்டை ஊராட்சி ஆண்டான் தெரு, ஆதிதிராவிடர் காலனி வரை சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் விளைநிலங்களில் செல்லும் பாதை இருந்துள்ளது.
இந்த பாதையில் பொதுமக்கள் விளைநிலங்களில் விளையும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பயன்பட்டு வந்த நிலையில் இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் உரிமையாளர்கள் கடந்த 30 ஆண்டு காலமாக பாதையை அடைத்ததால், இரு கிராமங்களில் உள்ள பொதுமக்களும் சிரமம் அடைந்து வந்தனர்.
மேலும் கண்டியன்பட்டி ஆதிதிராவிடர் காலனி மற்றும் ஆண்டாண் தெரு பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களை சேர்ந்தோர் மயானத்திற்கு கூட செல்ல பாதையின்றி அவதி அடைந்து உயிரிழப்பவர்களை காட்டுக்குளம் வழியாக எடுத்துச் செல்லும் சூழல் நிலவி வந்தது. அதுமட்டுமின்றி ஆண்டாள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் பாதையின்றி தவித்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் பாதை இல்லாமல் அவதியடைந்து வந்தனர்.இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என 30 ஆண்டு காலமாக கோரிக்கை இருந்து வரும் நிலையில் பிரச்சனைக்கு தீர்வாகாமல் இருந்தது.
கடந்த இரு தினங்களாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் இரு கிராமங்களிலும் உள்ள விளை நிலங்களில் உரிமையாளர்களையும் இரு கிராம மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதின் விளைவாக, அதில் சுமூக தீர்வு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நிலவியல் பாதையை எடுத்துக் கொடுக்க இரு கிராமங்களைச் சேர்ந்த விளை நிலங்களில் உரிமையாளர்களும் அதேபோல் கிராம மக்களும் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் இன்று (நவ.28) கண்டியம்பட்டியிலிருந்து ஆண்டாண் தெரு வரை சுமார் 2 அரை கிலோமீட்டர் தூரத்திற்கு ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு போலீசார் பாதுகாப்போடு நிலவியல் பாதை எடுக்கும் பணி நடைபெற்றது.
மேலும் இந்த நிலவியல் பாதை இனி வரக்கூடிய காலங்களில் நிரந்தர பாதையாக மாற்றுவதற்கு வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து, இரு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினருக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
மேலும் 30 ஆண்டுகாலமாக தீர்வாகாத நிலவியல் பாதை பிரச்சனை தற்போது இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமூக தீர்வு ஏற்படுத்தி, நிலவியல் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி தருவதற்கு முயற்சி மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் கறம்பக்குடி வட்டாட்சியர் இராமசாமி ஆகியோர் செயல் இரு கிராம மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.. ஐஐடி எம்.டெக் பட்டதாரியின் பின்புலம் என்ன?