புதுக்கோட்டை மாவட்டத்தின், மத்தியிலிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ளது சித்தன்னவாசல். இங்குள்ள ஓவியங்கள் அஜந்தா - எல்லோரா ஓவியங்களுக்கு நிகரானதாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஓவியங்கள், சமணர்களால் மூலிகைச் செடிகளின் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டது. சமணர்கள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து இருந்தார்களாம். அவர்களின் இருப்பிடம் தற்போது சமணர் படுகை என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் இங்குள்ள சுனை லிங்கமும், தமிழ்த்தாய் சிலையும், பிராமியக் கல்வெட்டுகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும். இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவில் வரலாற்றில் இடம் பிடித்த இந்த சித்தன்னவாசலில் உள்ள அனைத்து ஓவியங்களும் கல்வெட்டுக்களும் களையிழந்து வருகின்றன.
சித்தன்னவாசல் மலைப்பகுதியின் அடிவாரத்தில் பூங்காக்கள், படகு சவாரி தளம், நடனமாடும் தண்ணீர் எனச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதைக் கழிக்க நிறைய அம்சங்கள் இங்குச் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலில் மரங்கள், செடிகள் என அனைத்துமே முற்றிலும் சேதமாகிப் போனது. ஆனால் இதுவரையிலும் அப்பகுதியைச் சீரமைக்க எந்தவித நடவடிக்கையையும் தொல்லியல் துறை எடுக்கவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வரலாற்று இடங்களை ஆய்வு செய்யும் இயக்கமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைப்பைச் சேர்ந்த எடிசனிடம் கேட்டபோது, "சித்தன்னவாசலில் சிறப்புக் கணக்கற்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதன் சிறப்புகள் என்னவென்றே தெரியவில்லை. வெறும் சுற்றுலாத் தலமாக மட்டும் தான் பார்க்கிறார்கள்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்று கருதிப் பார்த்தால் தான், இதன் சிறப்பு மேலோங்கி நிற்கும். அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை. சித்தன்னவாசல் பற்றிய புகார்களை தொல்லியல் துறையிடம் நாங்கள் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.