வேங்கைவயல்: புதுக்கோட்டை அருகே முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இறையூர் வேங்கைவயல் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை உள்ளதாகவும், அய்யனார் கோயிலில் பல தலைமுறைகளாக அனுமதி மறுக்கப்படுவதாகவும் தீண்டாமை தொடர்பான புகார்களை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அய்யனார் கோயிலை திறந்து பட்டியல் இன மக்களை வழிபாடு செய்ய வைத்தார். அப்போது பெண் ஒருவர் பட்டியல் சமூக மக்களை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து 75 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதி முத்தையா, முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் உட்பட 8 பேர் விசாரணைக்காக திருச்சி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வேங்கைவயல் கிராமத்திற்கு வெளியூரை சேர்ந்த நபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருவதால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுவதாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் வேங்கைவயலை சுற்றி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதேபோல் குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடம் உள்ளிட்ட மூன்று இடங்களிலும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர் நபர்களின் வருகையால் தேவையில்லாத பிரச்னை ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று ஆளுநருக்கு அனுப்ப ஏற்பாடு!