புதுக்கோட்டை: பள்ளி மாணவர்களை, ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், ஆங்காங்கே ஒரு சில ஆசிரியர்களால் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி காயமுற்று வரும் சம்பவம் நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், செவலூரில் ஆட்டோ ஓட்டுனர் ஜெகன்மோகன் - ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகள் நர்மதா (வயது 9). செவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
நர்மதா படித்து வரும் அதே பள்ளியில் அவரது சித்தி மகனும் படித்து வருகிறார். நர்மதா சித்தி பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பாக கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 24) மாலை பள்ளி விடும் வேளையில் நர்மதா தனது சித்தி மகனை வீட்டிற்கு அழைத்து வரும்போது, சித்தி மகனை கருப்பட்டி என்று அழைத்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன், தனது அக்கா கேலி செய்தது குறித்து, வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். வகுப்பு ஆசிரியை உடனடியாக இந்த விவகாரத்தை, தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தலைமையாசிரியர் அங்கிருந்த பிரம்பால் மாணவி நர்மதாவை அடித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சிதான் நடக்கிறது - தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம்
தலைமையாசிரியர் அடித்ததில் காயமடைந்த நர்மதா, வலியால் துடித்து அழுது கொண்டே வீட்டிற்கு வரும் வழியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்த நர்மதாவை அவரது தாயார் ராஜேஸ்வரி தண்ணீர் தெளித்து, எழுப்பி விபரத்தை கேட்டுள்ளார்.
இதனையடுத்து பள்ளியில் நடந்தவற்றை, தனது தாய் ராஜேஸ்வரிடம் நர்மதா கூறியுள்ளார். இதனையடுத்து ஜெகநாதன் தனது வீட்டிற்கு வந்த நிலையில், தனது தந்தையிடம் கூறியதையடுத்து பயத்தில் நாளை முதல் பள்ளிக்கு செல்ல வில்லை என்றும் கூறியுள்ளார்.
நர்மதாவின் உடல்நிலை சோர்வுற்ற நிலையில், அவரை சோதித்ததில் காய்ச்சல் வந்துள்ளது. இதன் பின்னர் தனது ஆட்டோவில் பொன்னமராவதி அரசு பாப்பா ஆச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து பனையப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
வார்த்தையால் கண்டிக்க வேண்டிய ஆசிரியரே பிரம்பால் அடித்து மாணவியை பயமுறுத்தி காய்ச்சல் வர வைத்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலைமையாசிரியர் சரவணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: INDIA கூட்டணியினரை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!