2000 ஆண்டு பழைமையான பெருமை மிகு தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றுகிறது. கிபி 10ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் மாமன்னர் இராச ராச சோழனால் கட்டப்பட்ட இந்த கலை சான்று ஆண்டுகள் பல கடந்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துவருகிறது.
தமிழ்க் கல்வெட்டுகள் அதிகமாகக் காணப்படும் கோயிலும் இதுதான். தமிழர்களின் கட்டடக் கலையை உலகிற்கே தெரிய வைத்த இக்கோயில் உலக அளவில் போற்றப்பட்ட ஒரு பெருஞ்சிற்பமாகும். இதனைக் கொண்டாடும் வகையில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி அக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1997இல் குடமுழுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு 47 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு குடமுழுக்கு நடைபெறாமல் இருந்தது. அதனால் இக்கோயிலைக் கண்டால் ஆட்சியாளர்களே நடுங்குவார்கள் என்ற வரலாறும் உண்டு.
இந்நிலையில் அந்த குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்தப்படாமல் தமிழில் நடத்த வேண்டும் என ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்கள் அந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து இந்த வீடியோவை உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கிய இளைஞர்கள் எடிஈசன், மதன் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியபோது, தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறானது கிடையாது. வார்த்தைக்கு வார்த்தை தமிழ் தமிழன் என்றால் மட்டும் போதாது. தமிழ்நாட்டில் தமிழில் மந்திரம் சொல்லி பழகினால் தான் என்ன?
கோயிலில் பூஜை செய்வதற்கு என தமிழ் வழக்காறு இருக்கும்போது அதை யாரும் கண்டுகொள்வதே கிடையாது. அதனால்தான் இந்தாண்டு குடமுழுக்கு முழுவதும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் ஒரு வீடியோவை தயார் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டோம். இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அதேபோல சம்பந்தப்பட்டவர்களும் இதனை கருத்தில்கொண்டு தஞ்சை குடமுழுக்கு தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தலைமுறையினரான நாங்களும் இதனை மறந்துவிட்டால் அடுத்த தலைமுறையினர் தமிழ் என்ற ஒரு மொழி இருப்பதை மறந்துவிடுவார்கள். ஆளப்போறான் தமிழன் பாடலை வாட்ஸ்அப் ஸ்டேடஸ்-ஆக வச்சா மட்டும் போதுமா உலகை ஆண்ட ஒரு தமிழன் கட்டிய கோயிலில் தமிழில் வழிபாடு செய்யச் சொல்லி கெஞ்சும் அவல நிலையை மாற்ற வேண்டமா? என்று கேள்வியெழுப்பினர்.
இதையும் படியுங்க: 'பணத்துக்காக சிவலிங்கத்தை புகைப்படம் எடுத்த குருக்கள் மீது நடவடிக்கை' - சிபிஐ மனு