புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் எழுந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், பல மாதங்களாகியும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 105 நாட்களாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை இறையூர், வேங்கைவயல், காவேரி நகர், கீழ முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 147 நபர்களிடம் விசாரணை செய்துள்ளனர். இதனிடையே தமிழக அரசு நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.
பின்னர், குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரினை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனித கழிவுதான் என்பது உறுதியானது. இதையடுத்து டிஎன்ஏ பரிசோதனை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதிகோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
அதில், தாங்கள் 11 பேரை சந்தேகிப்பதாகவும், அவர்களுடைய டிஎன்ஏவை பரிசோதனை செய்ய வேண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரினர். வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 9 பேரிடமும், காவேரி நகரைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமும் சோதனை நடத்த அனுமதி கோரினர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்யா 11 பேரிடமும் டிஎன்ஏ சோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், காவேரி நகர் பகுதியை சேர்ந்த காசி, ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா, கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் முத்தையா ஆகியோர் இன்று(ஏப்.25) டிஎன்ஏ பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகினர். அவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
மீதமுள்ள எட்டு பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்துவிட்டனர். போலீசார் தங்களை குற்றவாளிகள் ஆக்குவதற்கு முயற்சிப்பதாகவும், அதனால் தங்களது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்த பிறகே சோதனைக்கு வருவோம் என்றும் கூறியதாக தெரிகிறது.
அதேநேரம் சந்தேகத்திற்குரிய நபர்கள் டிஎன்ஏ சோதனைக்கு வராவிட்டால், விசாரிக்கப்பட்ட 147 பேரிடமும் சோதனை நடத்த நேரிடும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை முடிவுகள் வெளியாக சுமார் மூன்று மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்தனர்.