புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் கனரா வங்கியின் கிளை இயங்கிவருகிறது. அந்த வங்கியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கணக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி முக்கண்ணாமலைப்பட்டியில் முதல் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தற்போதுவரை 20க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பிவருகின்றனர். இதன் காரணமாக, 28ஆம் தேதியிலிருந்து, வங்கியின் சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் பெற முடியாமல் மிகவும் சிரமமடைந்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த 16ஆம் தேதி கரோனா பாதிப்பு காரணமாக வங்கியின் கிளை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என வங்கி முகப்பு பகுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இப்பகுதியில், ஏடிஎம் சேவை மையங்களும் அதிகளவு இல்லாததால், ஆயிரக்கணக்கான மக்கள் தேவைப்படும்போது பணம் எடுக்க முடியாமல் பாதிப்படைந்து வந்தனர்.
இந்நிலையில், இன்று வங்கிமுன் கூடிய வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளின் காலம் முடிந்துவிட்டதால் வட்டி இரண்டு மடங்கு உயரும் வாய்ப்புள்ளது. எனவே அடகு வைத்த நகையைத் திருப்பிவைக்க வங்கியைத் திறக்க வேண்டும், கரோனா தொற்று காலத்தில் வேலையில்லாமல் இருக்கும் தங்களுக்குச் செலவுக்காகச் சேமித்து வைத்த பணத்தை வழங்க வங்கியை திறக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.