கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
குறிப்பாக, தேநீர்க் கடைகளைத் திறக்கலாம் என்றும் ஆனால் பார்சலாக மட்டுமே தேநீரை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாகத் தேநீர்க்கடைகள் இயங்கி வந்தன.
ஆனால், தற்போது பெரும்பாலான தேநீர்க் கடைகளில் அரசு உத்தரவுகளை மீறி பொதுமக்களைக் கடை முன்பாகவே தேநீர் அருந்த அனுமதிப்பதாகவும், இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் வந்தது.
அந்த புகாரை அடுத்து, வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட வருவாய், காவல்துறை அலுவலர்கள் புதுக்கோட்டை நகர் முழுவதும் அதிரடியாக இன்று சோதனை நடத்தினர்.
இதில், பத்துக்கும் மேற்பட்ட தேநீர்க் கடைகளில் முன்பு பொதுமக்கள் அதிகளவில் கூடி தேநீர் அருந்திக்கொண்டிருந்து கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக அந்த கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்த கடைகள் சீல் வைக்கப்பட்டன.
இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்