புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள அம்பலகாரன்பட்டியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் வீட்டு கட்டுமான பணிக்காக பெருமாநாட்டில் இருந்து லாரி மூலம் ஹாலோ பிளாக் கல் ஏற்றி வரப்பட்டது. அப்போது இடையன்பாறை என்னும் இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், லாரியில் இருந்த அம்பலகாரன்பட்டியைச் தமிழ்ச்செல்வம் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னையா(62) அவரது மனைவி வளர்மதி(51), ராஜா(21), ஓட்டுநர் சபரி(33) ஆகியோர் படுகாயமடைந்து பொன்னமராவதி பாப்பாயி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரையூர் காவல்துறையினர், இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.