சட்டப்பேரவை தேர்தலால் நொடிக்கு நொடி விறுவிறுப்பாக இருந்து வந்த தமிழ்நாடு, தற்போது மழை பெய்து ஓய்ந்தது போல் காணப்படுகிறது. 10 ஆண்டு காலத்திற்கு பின்னர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக. முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்பாளர்களைத் தவிர்த்து பல இடங்களில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
பெரிய கட்சியினர் தேர்தல் பரப்புரைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தது அனைவருக்கும் தெரிந்த இலைமறைக் காய் ரகசியமே. ஆனால், புதுக்கோட்டையில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளரான குணா என்பவர், தான் தேர்தலில் போட்டியிட செலவு செய்த தொகையினை பகிரங்கமாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் இந்த தேர்தலில் 476 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுயேட்சை வேட்பாளரின் வெளிப்படை தன்மை, பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குணாவிடம் பேசுகையில், "மக்களுக்காக சேவை செய்கிறோம். பயணம் செய்கிறோம் என்று பேசினால் மட்டும் போதாது. மக்களிடத்தில் வெளிப்படையாக நடந்து கொள்வது தான் அரசியலில் இருக்கும் முதல் நேர்மை என நான் நினைக்கிறேன். எனக்கு கிடைத்த 27 ஆயிரம் ரூபாயில் நான் என்ன செலவு செய்தேன் என தெளிவாக இந்தப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன். நான் வெற்றி பெற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையுடன் களத்தில் இறங்கவில்லை. தோல்வி எனக்கு ஒருபோதும் வருத்தத்தை தரவில்லை. என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் சுயநலமாக இருக்காமல் மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன் வைக்கிறேன்" என்றார்.