கடற்கரையை ஒட்டிய புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட பல மீனவ கடற்கரைக் கிராமங்கள் உள்ளன. அதில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடல் விவசாயிகளான மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தால் தான் அவர்களுடைய அன்றாட வாழ்வின் தேவைகள் உறுதி செய்யப்படும். தற்போது, உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியா முழுவதும் கடந்த 20 நாள்களாக தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது.
வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் மீனவர் சங்க சேர்மன் முனியசாமி பேசுகையில், "வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கடல் மீன்களின் இன பெருக்கத்திற்கான மீன் பிடி தடை காலம் அமலுக்கு வரவுள்ளது. மத்திய - மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் இந்த தடைக் காலம் சுமார் இரண்டு மாத காலம் வரை நீடிக்கும்.
இதனிடையே உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ள நிலையில், கடந்த 24ஆம் தேதியில் இருந்து கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடித் தடை காலம் ஆரம்பமாகிறது. வழக்கமாக, மீன்பிடித் தடை காலத்தில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து மீனவர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 5 ஆயிரம் வழங்குவார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நிவாரண நிதியினை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தந்து மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் காக்க முன்வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 30 ஆயிரம் முகக் கவசங்களை தயாரிக்கும் சிறைக்கைதிகள்