புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஏம்பல் கிராமத்தில் மாயமான ஏழு வயது சிறுமி ஜூலை ஒன்றாம் தேதி மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து காவல் துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். அதில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் சிறுமியின் வீட்டிற்கு அருகாமையில் வசித்துவரும் 29 வயதான வியாபாரி ராஜா என்பவரை காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்ததில், தனது வீட்டின் அருகே சென்றபோது, சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், சிறுமி கத்தி கூச்சலிட்டதால் கட்டையால் அடித்துக் கொன்றதாகவும் ஒத்துக்கொண்டார்.
அதனடிப்படையில் அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவர்களது உறவினர்கள் சிறுமியின் இறப்புக்கு காரணமானவரை உடனடியாக தண்டிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயினை அக்குடும்பத்திற்கு வழங்குவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை வழங்கினர். தொடர்ந்து, சிறுமியின் உடல் சொந்த ஊரான ஏம்பலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.