புதுக்கோட்டை: இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவுகலந்த கொடுமை நடைபெற்று நாட்டையே பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழும் பட்டியலின மக்கள் தொடர் சாதி ரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், பெருங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வைராண்டி கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலின மக்களை அவர்களின் சாதியைச் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், "குளத்தில் நீங்கள் எல்லாம் குளிக்க கூடாது" என்று கூறியதோடு, அவர்களை கம்பால் அடித்து விரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் குடிநீர் பாட்டிலில் இரண்டு மாணவர்கள் சிறுநீர் கழித்து, அந்த மாணவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சம்பவமும் நடைபெற்றதாகக் மேலும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இவ்வாறு தொடர்ந்து தீண்டாமை சம்பவங்கள் நடைபெற்று வரும் புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசல் ஒன்றியம், கூவாட்டுப்பட்டி ஸ்ரீ ஐயனார் கோயிலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை கடவுள் வழிபாடு செய்யக் கூடாது என மற்றொரு சமூகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இது சம்பந்தமாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கியதாகவும் கிராக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து பலமுறை அதிகாரிகள் மட்டத்தில் இருந்து சமாதான கூட்டமும் நடைபெற்று உள்ளது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்கி உள்ளார். இதை நம்பி கிராம மக்கள் வந்ததாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா அலுவலகத்தில் இல்லாமல் வேறொரு இடத்திற்கு சென்று விட்டதாகவும், மற்றொரு நாள் வருமாறும் அலுவலகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இது சம்பந்தப்பட்ட மற்றொரு தரப்பினரும் அலுவலகத்திற்கு வராததால், கிராம மக்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக தங்களை அதிகாரிகள் நிராகரிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள், தொடர்ந்து தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், தங்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், கோயிலின் ஒரு பகுதியில் சுவர் கட்டி அந்த சுவர் பகுதியில் இருந்து தான் கடவுளை வழிபட வேண்டும் என மற்றொரு சமூகத்தினர் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆலயத்தில் இதுபோன்று நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டிய அவர்கள், இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: "குற்றவாளிகளை கைது செய்ய திமுக தயங்குகிறது" சீமான் சாடல்..!