புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மிகவும் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பாக பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் பழமையான கட்டடமாக இருப்பதால் அவ்வப்போது மழைக்காலங்களில் மேற்கூரைகளின் சிமெண்ட் பெயர்ந்து விழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டித்தருமாறு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகின்றது. மேலும் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தற்காலிக பேருந்து நிலையம் தேவைப்படுவதால் அவற்றை அமைக்கும் பணியும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு முன்பாக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்து தருமாறு கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் சுழ்ந்து காணப்பட்டது.
மேலும் தண்ணீர் செல்வதற்கு வடிகால்கள் ஏதும் சரியாக இல்லாத காரணத்தினால் மக்கள் பெரும் சிரம்மத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஒன்றான தேநீர் கடை எண்.14 அந்த கடையின் மேற்கூரையின் சிமெண்ட் கட்டிகள் பெயர்ந்து விழுந்தன. கடையில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த பயணிகள் சிமெண்ட் கட்டிகள் பெயர்ந்து விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிர்வாகத்தின் சார்பாக நகராட்சி அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று கடையின் மேற்கூரை மற்றும் கட்டடத்தின் தன்மையை ஆராய்ந்ததோடு சிமெண்ட் கட்டிகள் பெயர்ந்து விழுந்ததையும் பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த அனைத்து கடை உரிமையாளர்களிடம் கடைகளை விரைவில் காலி செய்து தருமாறு அறிவுறுத்திச் சென்றனர். இதனால் புதிய பேருந்து நிலையம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:மக்கள் ஏற்றுக்கொண்டால் எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆகலாம் - குஷ்பு