பழனிச்சாமி - சரஸ்வதி தம்பதி:
பழனிச்சாமி மனைவி சரஸ்வதி கூறுகையில், பிரசவ வலி வந்தவுடன் வீட்டைவிட்டு வெளியில் வந்து சாலையைப் பார்த்தபோது எங்கள் வீட்டிலிருந்து எந்தத் திசையில் போனாலும் குறுக்கே மரம் விழுந்துக்கிடந்தது. அவசரத்துக்கு ஆட்டோ கூட கிடைக்கவிலை. எங்கள் ஊருக்குள் இருந்தவர்கள் தான் கைத்தாங்கலாகத் தூக்கிச் சென்றார்கள். பகல் ஒரு மணி வாக்கில் சிசேரியன் மூலம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு முதலில் புயலை நினைவுபடுத்தும் விதமாக கஜாஸ்ரீ என்று பெயர் சூட்டினோம். தற்போது பவிஷ்னா என்று அழைக்கிறோம் என்றார்.
சாந்தி – சந்திரன் தம்பதி:
கஜா புயலின் தாக்கம் குறித்து சாந்தி கூறுகையில், காற்று வீசத்தொடங்கிய நேரத்தில்தான் எனக்கு பிரசவவலி ஏற்பட்டது. வலி அதிகரிக்க நானும் வலிதாங்காமல் துடித்துக்கொண்டிருந்தேன். அப்போது வீட்டிலிருந்த ஓடுகள் ஒவ்வொன்றாக பறந்துபோய்க் கீழே விழுந்து உடைந்து கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையில் என்னையும் என் மூத்த மகனையும் காப்பாற்ற என் கணவர் பட்டபாடு சொல்லி மாளாது. அது பிரசவ வலியைக் காட்டிலும் கொடுமையானது. மருத்துவக் கல்லூரி உள்ள எட்டு கிலோமீட்டர் தூரத்தை மூன்று மணி நேரம் பயணித்துக் கொண்டு சென்றுசேர்த்தனர். மருத்துவமனையில் சேர்ந்த ஐந்து நிமிடத்தில் ஆண்குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறான் என்றார்.
தேவேந்திரன் - பாலாமணி தம்பதி:
நீண்ட காலமாக குழந்தையில்லாமல் இருந்து கருத்தரித்த பாலாமணியை அவரது குடும்பத்தினர் மிகவும் கண்ணும் கருத்துமாக பாதுகாத்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் கஜா புயலின்போது பிரசவவலி ஏற்பட்டது. பல தடைகளை மீறி மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்தோம் என்றனர். மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் அந்த நேரத்தில் எங்களுக்கு ஆறுதலாக இருந்தனர்.
பாலகிருஷ்ணன் - கல்பனா தம்பதி:
கல்பனா கூறுகையில் என் கணவர் பாலகிருஷ்ணன் தற்போது சிங்கப்பூரில் வேலைப்பார்த்து வருகிறார். என் பிரசவ நேரத்தில்கூட அவர் இங்கு இல்லை. பிரசவவலி ஏற்பட்டபோது இங்கு கடுமையான மழை பெய்தது. புயல் நேரத்தில் உடையாம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக என்னை கொண்டுச்சென்றனர். பனிக்குடம் உடைந்த நிலையிலும் பல சிரமங்களை அனுபவித்து குழந்தையை பெற்றெடுத்தேன். நாங்கள் பட்ட கஷ்டங்களை எங்கள் எதிரிக்குகூட வரக்கூடாது என தெரிவித்தார்.
இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் கஜா புயலின்போது தங்கள் அனுபவத்தை கூறும்போது கேட்கும் நம் மனதும் பதைபதைக்கிறது. தமிழ்நாட்டை உலுக்கிய கஜா புயலன்று இந்த பூமியை முத்தமிட்டுப் பிறந்த குழந்தைகளுக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம். பிறந்த நாள் வாழ்த்துகள் செல்லங்களே...!