புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குடிக்காடு கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை இதுவரை வழங்கவில்லை என்றும், அத்தொகையை உடனே வழங்க வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
2022-2023ஆம் ஆண்டில் விவசாய பயிர்கள், அதிகப்படியான பூச்சியாலும், அறுவடை நேரத்தில் பெய்த கனமழையாலும் பாதிக்கப்பட்டதால் அரசினால் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் குடிக்காடு கிராமத்தில் உள்ள விவசாயிகளும் பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தோம். ஆனால், காப்பீடு செய்தும் அதற்கான பயிர் காப்பீடு தொகையை அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: பத்து வருட போராட்டத்திற்கு 8 மணி நேரத்தில் தீர்வு.. அசத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்!
இது குறித்து விவசாயி ஞானசிவம் கூறுகையில், “குடிக்காடு கிராமத்தில் 2022-2023ஆம் ஆண்டில் விவசாயப் பயிர்கள் அதிகப்படியான பூச்சியாலும், அறுவடை நேரத்தில் பெய்த கனமழையாலும் பாதிக்கப்பட்டதால் அரசினால் இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் எங்களது கிராமம் மட்டும் புறக்கணிக்கப்பட்டது.
இதனையடுத்து, பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படாதது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால், மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இதுவரை பயிர் காப்பீடு சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, நாங்கள் பலமுறை நேரில் சந்தித்து அவர்களிடம் இது குறித்து பேசினோம். ஆனால், அவர்கள் இன்று, நாளை, நாளை மறுநாள் எனக் கூறி அலைய விட்டார்களே தவிர, அதற்கு உண்டான காப்பீடு தொகை இதுவரை வழங்கவில்லை.
இந்நிலையில், பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கி உள்ளோம். இந்த மனுவின் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளை ஒன்று திரட்டி சாலை மறியல் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி, அரசுக்கு தங்களது கோரிக்கையை கவனத்தில் கொண்டு வருவோம்” என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: "அமராவதி ஆற்றில் தோல் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்" - மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு!