புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் விவேகானந்தா நகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் ஆறு ஏக்கர் பரப்பளவில் குட்டைகள் அமைத்து அதில் மீன் பண்ணை அமைத்துள்ளார்.
அந்த இடம், அதனைச் சுற்றி 10 ஏக்கர் பரப்பளவிலான அரசு நத்தம் வாரி புறம்போக்கு இடங்களில் கடந்த சில மாதங்களாக தனியார் ஆலைகளுக்குச் சொந்தமான குப்பை, ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றங்களாலும் தொற்றுநோய்களாலும் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதேபோல் ரசாயன கழிவுகளைக் கொட்ட முயன்றதாக இரு லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மந்திர் காவல் ஆய்வாளர் பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல் குளத்தூர் வட்டாட்சியர் பழனிசாமி, மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அந்த லாரிகளைப் பறிமுதல்செய்து மாத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
லாரிகளின் ஓட்டுநர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் நிலத்தின் உரிமையாளர் ராமதாஸ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் கொட்டப்படும் கேரள கழிவுகளைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை!