இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறுகையில், 'முதலமைச்சரின் அறிவுரைகளின்படி புதுக்கோட்டையில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து துறைகளும் ஒங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது அரிமளம் ஊராட்சி ஒன்றியம், மிரட்டுநிலை ஊராட்சியில் ஒரு நபருக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு தற்பொழுது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனைத் தொடர்ந்து மிரட்டுநிலை ஊராட்சி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வெளியில் இருந்து வாகனங்கள் உள்ளே செல்லாத வகையிலும், உள்ளிருக்கும் நபர்கள் வெளியில் வராத வகையிலும் 24 மணி நேரம் காவல்துறையின் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிரட்டுநிலையை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி, மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தினந்தோறும் தேவைப்படும் காய்கறிகள், மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் வகையில் ஆர்.டி.பி.சி.ஆர் கருவி கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியினை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ஐ.சி.எம்.ஆர் சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அனுமதி பெற்றவுடன் இன்னும் ஒருசில நாள்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கரோனா வைரஸிற்கான பரிசோதனை செய்து, அதற்கான அறிக்கை கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக ரேபிட் ஆண்டிபாடி டெஸ்ட் என்று சொல்லக்கூடிய கிட் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 480 எண்ணிக்கையில் வரப்பெற்றுள்ளது. இந்த கிட்டானது 7 நாள்களுக்கு மேலாக அறிகுறிகளுடைய நபர்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் கருவியின் மூலம் கரோனா வைரஸ் சாதாரணமாக யாருக்கு இருந்தாலும் பரிசோதிக்கக்கூடியது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
இதன்மூலம் அவர்களது இருப்பிடத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாகவோ சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி கரோனா வைரஸிற்கான முடிவுகள் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உடனிருந்தார்.
இதையும் படிங்க... புதுக்கோட்டையில் முதல் கரோனா - விஜயபாஸ்கர்