புதுக்கோட்டை: திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா ஏற்பாட்டில், புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில், மச்சுவாடி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் மற்றும் சிறுவர்களுக்கான சைக்கிள் பந்தயம் இன்று (டிச.03) நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த பந்தயங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியானது பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும், வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாமலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக குதிரை வண்டி பந்தயத்தில் ஒவ்வொரு பிரிவு பந்தயம் நடைபெற்ற போதும், அதிக அளவிலான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில், வாகனத்திற்கு மூன்று பேர் வீதம் அதிகமான ஒலி எழுப்பியவாறு குதிரைக்கு பக்கவாட்டில் சென்றனர்.
இந்த குதிரை வண்டி பந்தயம் நடைபெற்ற இச்சடி பகுதி எல்லை வரை இரு புறமும் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பந்தயத்தை கண்டு ரசித்த வேளையில், குதிரை வண்டியைச் சுற்றி சென்ற இளைஞர்களைப் பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். குறிப்பாக குதிரை வண்டிகளுக்கு இடையூறாகவும், பொதுமக்கள் அச்சமடையுமாறும் இளைஞர்கள் பயணித்ததோடு, ஒருவரை ஒருவர் முந்திச் சென்றது பார்ப்போரை பதைபதைக்க வைத்தது.
இதனால் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது குதிரை வண்டி பந்தயமா? அல்லது பைக் ரேஸா? என பொதுமக்கள் முனுமுனுத்தவாறு சென்றனர். மேலும், திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் மாடு மற்றும் குதிரைகள் ஒன்றுடன் ஒன்று முந்திச் செல்லும்போது, அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திமுகவினரே பந்தயத்தில் சென்ற வண்டிகளை சுற்றி பயணித்தது, போட்டியில் பங்கேற்றவர்கள் இடையே ஒருவித அச்சத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
ஒரு நிகழ்ச்சி நடைபெறும் போது பாதுகாப்பு வசதிகளை சரியாக கையாள்வது அரசின் கடமை. அந்த பாதுகாப்பில் காவல்துறையின் பங்கும் மிக முக்கியம். மேலும் இரு அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தும், இதுபோன்று தலைகவசம் அணியாமல் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களில் சென்ற செயல் வேதனை அளிக்கும் வகையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பார்வையாளர் செந்தில்குமார் கூறுகையில், “இரண்டு அமைச்சர்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக பந்தயத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு வண்டிக்கு பின்னரும், இளைஞர்கள் அதிக சத்தத்தோடு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் சென்றது வேதனையை ஏற்படுத்தியது.
இனிவரும் காலங்களில் இது போன்று நடக்காமல், உரிய வழிமுறைகளை பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு உண்மை உதாரணமாக இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இளைஞர்கள் யாருமே தலைக்கவசம் அணியவில்லை. இது வருத்தத்தை தாண்டி, அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது” என்றார்.
இதையும் படிங்க: அன்னபூரணி படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு..! என்ன காரணம்?