தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டது தொடர்பாக பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் அதனைக் கடுமையாக எதிர்த்து வந்தனர். அதன் பின் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகம் சீல் வைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த பிரச்னையின்போது திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் மீது அங்கு காவல் ஆய்வாளராக பணிபுரியும் அன்பழகன் என்பவர் பொய் வழக்குப்போட்டு விட்டதாகவும், திமுகவிற்கு ஒத்துழைப்பதாகவும், அரசியல் கட்சியினருக்கு துணைபோகும் காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கரோனா தொற்று நிலவிவரும் இக்காலகட்டத்தில் கூட்டம் கூடுவது சரியல்ல என காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.