புதுக்கோட்டை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று (மார்ச் 17) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “பால் தட்டுப்பாட்டிற்கு ஆளும் கட்சியே காரணம். இந்த விஷயத்தில் உடனடியாக பால் வளத்துறை அமைச்சர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். நீட் தேர்வு ரகசியம் என்று ஒன்றும் இல்லை. நீட் தேர்வானது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஆனால் திமுக, நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறி அரசியல் செய்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டு ஆண்டுகளாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. தேவை இல்லாமல் மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் குழப்பாமல், நிலையான அறிவிப்பை திமுக வெளியிட வேண்டும்.
புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு ‘அனிதா’ பெயரை சூட்டியதுதான் நீட் தேர்வு ரகசியமா? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பல கட்சிகள் பின்வாங்கிய நிலையில், தேமுதிக தைரியமாக தேர்தலை எதிர் கொண்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு தேர்தல். இது தேமுதிகவிற்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது.
இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை வைத்தும், தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனை பல கோடி ரூபாய் கொடுத்துதான் சட்டமன்ற உறுப்பினராக்கி உள்ளனர். திருச்சி சிவா இல்லம் தாக்கப்பட்டது, காவல் நிலையத்தில் திமுகவினர் அராஜகம் செய்தது, திருச்சியில் பட்டப் பகலில் பேராசிரியை தாக்கப்பட்டதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி.
இது மட்டுமின்றி திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் மக்கள் முகம் சுளிக்கும் விதமாக உள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழை வளர்க்கக் கூடிய தமிழ்நாட்டில், அரசு பொதுத் தேர்வில் தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்றால், அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மிகுந்த அவமானம்.
எனவே திமுக அரசும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்று, இதற்கு உண்டான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். தமிழை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். கோடி கோடியாக செலவு செய்தும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் 75 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளன. மீதமுள்ள 25 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை. இது பொதுமக்களுக்கு தேர்தல் மீது நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
அதேபோல், மாணவர்களுக்கு தேர்வு மீது நம்பிக்கை இல்லை. இது எதிர்காலத்தை கண்டிப்பாக பாதிக்கும். பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, காவிரி, வைகை, குண்டாறு திட்டம் உள்ளிட்ட எந்த வித வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தாலும், திமுக அவரது கட்டுப்பாட்டில் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சி சிவா - கே.என்.நேரு ஆதரவாளார்கள் மோதல்: காவல் நிலையம் சூறையாடல்; பெண் காவலர் காயம்!