புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் (Eraiyur Vengai vayal Village) பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, டிஐஜி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர், குற்றவாளிகளைக் கண்டறியும் நோக்கில் அப்பகுதியைச் சேர்ந்த 20 பேருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று (ஜன.9) விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டனர்.
பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் கடந்தாண்டு டிச.26ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே குற்றவாளிகளைப் பிடிக்க, திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தரின் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஎஸ்பிக்கள், 4 காவல் ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை இதுவரை போலீசார் பிடிக்காததால் பல்வேறு அரசியல் கட்சியினரும் சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பல்வேறு சமூக நல அமைப்பினரும் இந்த இழிவான காரியத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே, சட்டப்பேரவை கூட்டத்தொடரும் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் பிடிக்க காவல்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில் வேங்கைவயல் இறையூர் மற்றும் அதனைச் சுற்றிய கிராமங்களைச் சேர்ந்த 20 நபர்களுக்கு நேற்று சம்மன் அனுப்பியுள்ள போலீசார், வெள்ளனூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக நேற்று அந்த கிராமங்களைச் சேர்ந்த ஐந்து நபர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் டிஐஜியால் அமைக்கப்பட்ட போலீஸ் குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில், 5 பேரிடமும் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் மற்ற நபர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.
அதுமட்டுமின்றி வெள்ளனூர் காவல் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, 'இன்னும் ஓரிரு தினங்களில் இந்த இழிவான சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள்' எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்பாவாடையுடன் அடித்து துரத்தினர் - புதுக்கோட்டையில் மீண்டுமொரு வன்கொடுமை