புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேவுள்ள ஆனைவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரைய்யா (45). இவர் தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் வசித்துவந்தார். கூலித் தொழிலாளியான வீரைய்யா நேற்று (நவ. 11) மாலை 6 மணியளவில் தனது நண்பருடன் வீட்டைவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த மனைவி அக்கம்பக்கத்தினரிடம் வீரைய்யா பற்றி விசாரித்து, அவரைத் தேடிவந்துள்ளார். இருந்தபோதிலும், அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் காலை ஆனைவாரி அருகேவுள்ள பாம்பாறு பகுதியில் வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வீரைய்யா மனைவி உறவினர்களுடன் சென்று பார்த்தபோது இறந்து கிடப்பது வீரைய்யா எனத் தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கே.புதுப்பட்டி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், வீரைய்யா உடன் சென்ற நண்பர் தலைமறைவாக உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான காரணம் என்னவென்று தெரியும் எனக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வீரைய்யாவுக்கு மதுப் பழக்கம் இருப்பதால் நண்பருடன் சேர்ந்து மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டு, கொலை நடந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது.
இதையும் படிங்க: 3பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் - யானைகவுனி காவல்துறையினருக்கு நெருக்கடி!