புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேவுள்ள விராச்சிலையைச் சேர்ந்தவர் உமையாள் ஆச்சி(70). இவரது கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். அவரது மகன்கள் வெளியூரில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (செப்.25) மாலை அவரது வீட்டில் பணி செய்யும் ஒரு பெண், உமையாளிடம் வந்து பேசியுள்ளார்.
பின்னர், அந்தப் பெண்ணுடன் வந்த மற்ற இரு பெண்களும் உமையாளைத் தாக்கிவிட்டு பீரோவிலிருந்த இரண்டு வளையல்கள், காதில் அணிந்திருந்த கம்மல்கள், 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, உமையாளையும் கட்டிப்போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
அதேசமயம் அவ்வழியே வந்த இளைஞர்கள், சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று பெண்களையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த மூன்று பேரும் உமையாளை தாக்கி, நகைகள் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த கருப்பாயி(35) , திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா (34), சிவகங்கை மாவட்டம் ஆவினிப்பட்டியைச் சேர்ந்த தெய்வானை(40) ஆகியோரை கிராம மக்கள் பனையப்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, மூன்று பெண்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே, மயக்கத்திலிருந்த உமையாளை மீட்ட காவல் துறையினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: லாரி உரிமையாளர் வீட்டில் 19 சவரன் நகை, 55000 ஆயிரம் கொள்ளை