குமரி மாவட்டத்தில் அருமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமாரிடம் கடந்த 21ஆம் தேதி இரவு அருமனை ஆலறவிளையைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் கிங்ஸ் என்பவர் பேசியுள்ளார். அப்போது, பேச்சிப்பாறையில் வசிக்கும் தனது சித்தியை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மிரட்டி வந்ததாகவும் இதனால் பயந்து அவர் தனது வீட்டில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது வீட்டுக்கு ஆயுதத்துடன் வந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டுவதாகவும் உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக ராணுவ வீரரும் உதவி ஆய்வாளரும் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 2. 46 நிமிடம் ஓடும் அந்த உரையாடலில், தனக்கு கட்டளை போடுவதற்கு நீ யார்? என ஒருமையில் ராணுவ வீரரை உதவி ஆய்வாளர் பேசுகிறார்.
முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் இந்த உரையாடல் விவகாரம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க குமாரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.
இந்த ஆடியோ உரையாடலில் பெரும்பகுதி எடிட் செய்து வெளியிடப்பட்டிருப்பதாகவும், இந்த உரையாடலுக்கு முன்பே சில முறை உதவி ஆய்வாளரிடம் தொலைபேசியில் கிங்ஸ் பேசியுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரம் ராணுவ வீரர் என்று பார்க்காமால் ஒருமையில் பேசிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இச்சம்பவத்தை காவல் துறையினர் மூடிமறைக்கும் வகையில் செயல்படக்கூடாது எனவும் குமரி மாவட்ட ஜவான்ஸ் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளைத் திறக்க உத்தரவு!