புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாட்ஸ்அப் குழு மூலம் இணைந்து, 'விதைக்காலம்' அமைப்பினர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையின் முக்கியமான பகுதிகளில் மரங்களை நட்டுவருகின்றனர். 200 பேர் கொண்ட இந்த அமைப்பில் நான்கு ஆண்டுகளாக இதுவரை ஏழாயிரம் மரக்கன்றுகளை நட்டு அசத்தியுள்ளனர்.
இது குறித்து விதைக்கலாம் அமைப்பினர் கூறும்போது, அப்துல் கலாமின் நினைவாக வாரம்தோறும் மரங்களை நட்டு வருகின்றோம். அப்துல் கலாம் பிறந்த தினத்தன்று பதாகைகளை நடுவதை விட மரங்களை நடலாம் என்று யதார்த்தமாக திட்டமிட்டு தொடங்கினோம்.
இதுவரை ஏழாயிரம் மரங்களை நட்டு இருக்கிறோம். கஜா புயலில் மரங்கள் அதிகளவில் சாய்ந்துவிட்டன. அடுத்த தலைமுறையினருக்கு ஏதேனும் விட்டுச்செல்ல வேண்டுமென்றால் இந்த மரங்களை மட்டும்தான் விட்டுச்செல்ல முடியும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.