காமராசர் பல்கலைக்கழகத்தில் 2019 - 2020ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை நாட்டுப்புறவியல் பாடப்பிரிவில், புதுக்கோட்டை விராலிமலையைச் சேர்ந்த திருநங்கை வர்ஷா(27) சேர்ந்துள்ளார். அவருக்கு காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் எம் கிருஷ்ணன் நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கினர். மூன்றாம் பாலினத்தவர்கள் உயர் கல்வியில் சேர்க்கும் முயற்சியைப் பல்கலைக்கழக மானியக் குழு வலியுறுத்தியுள்ளது. மேலும் இவர்கள் கல்விக் கட்டணத்தில் 50% சலுகை வழங்கியும் துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வர்ஷா கூறுகையில், ‘திருச்சியில் உள்ள கல்லூரியில் பிபிஏ படித்தேன். அதன் பிறகு நாட்டுப்புறக்கலைகளைக் கற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு நாட்டுப்புறக் கலையின் மீது உள்ள ஆர்வத்தினாலும், தற்போது நாட்டுப்புறக் கலை அழிந்து வரும் நிலையிலுள்ளது என்பதாலும் அதனை வளர்க்க வேண்டும் என்றும் என்னால் முடிந்த வரை அதில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் முதுகலை பட்டப்படிப்பு நாட்டுப்புறவியல் துறையில் காமராசர் பல்கலைக்கழகத்தில் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தேன்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எனக்கு அனுமதி தந்ததோடு மட்டுமல்லாமல் 50 விழுக்காடு சலுகையும் வழங்கியுள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. இத்துறையில் முனைவர் பட்டம் பெற்று, எனது நாட்டுக்கும், எனது வீட்டுக்கும் பெருமையைத் தேடித் தர விரும்புகிறேன்’ என்று கூறினார்.