புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன ரத்தப் பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் நவீன மருத்துவ உபகரணங்கள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (செப்டம்பர் 6) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதிநவீன ரத்தப் பரிசோதனை கருவி பார்வையிடப்பட்டது.
இந்த அதிநவீன ரத்தப் பரிசோதனை கருவியின் மூலம் கரோனா நோயின் தீவிரத்தன்மை அறிவதற்கான பரிசோதனை, தைராய்டு ஹார்மோன் பரிசோதனை, இருதய நோய்க்கான பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சியை கண்டறியும் கர்ப்பகால பரிசோதனை, புற்றுநோய்க்கான பரிசோதனை, எலும்பு நோய் பரிசோதனை மற்றும் தொற்றுநோய்க்கான ரத்தப் பரிசோதனைகள் என பல்வேறு வகையான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும்.
மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிறுநீரக சுத்திகரிப்பு மையம் போன்ற பல்வேறு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கூறும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: அடிப்படை உரிமைகள் தொடர்பாக வழக்கு நடத்தி வெற்றிகண்ட எட்னீர் மடாதிபதி காலமானார்