புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோங்குடி ஊராட்சிக்கு உள்பட்ட யோகாம்பாள்புரம், அத்தாணி, மணவயல், அல்லம்பட்டி, தாளிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 2018 -19 ஆம் ஆண்டு யோகாம்பாள்புரம் கிராமத்தில் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொது விநியோக அங்காடி கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதால், இப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கோங்குடியிலுள்ள அங்காடியில் ரேஷன் பொருள்களை வாங்கும் நிலை இருந்து வருகிறது.
நீண்ட தூரம் சென்று பொருள்களை வாங்குவதால் ஒவ்வொரு முறையும் இந்த கிராம மக்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை கண்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் புதிய கட்டடத்தை திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் அதனை உடனடியாக திறக்க வேண்டும் இல்லையெனில் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி அறந்தாங்கி காரைக்குடி சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் காவலர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் முடிந்த பிறகு புதிய அங்காடி கட்டடத்தை திறந்து நடைமுறைக்கு கொண்டு வருவது என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!