புதுக்கோட்டை: இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், நேற்று (செப்.20) ஊர்வலமாக எடுத்த செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் மரக்கிளையில் மோதி கரைப்பதற்கு இரண்டு மணி நேரம் தாமதமானதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் (செப்.18) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், புதுக்கோட்டையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 60 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து, இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட 37 விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஊர்வலமானது, புதுக்கோட்டை திலகர் திடலில் தொடங்கி சந்தப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய அரசு மருத்துவமனை, பிருந்தாவனம், அண்ணா சிலை வழியாக கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் கடந்து புதுக்குளத்திற்கு எடுத்து வரப்பட்டன.
மேலும், புதுக்குளத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கரைப்பதற்கு முதல் சிலையாக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலை மரக்கிளையில் சிக்கி சேதமடைந்தது. அதனைத்தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்துடன் மரக்கிளையை அகற்றி பாதையை சீரமைத்தனர். இதனால் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு இரண்டு மணி நேரம் தாமதமானது. இதனால் ஊர்வலமாக வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், ஆலங்குடி, வடகாடு, முக்கம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆலங்குடி நகரின் பிரதான சாலைகளின் வழியாக வடகாடு, முக்கம், சந்தைப்பேட்டை வழியாக சித்தி விநாயகர் குளக்கரைக்கு கொண்டு கரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி கட்சியினர், பாஜகவினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அறந்தாங்கி நகரில் 17 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 17 விநாயகர் சிலைகளும் அறந்தாங்கி வடகரை முருகன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக பட்டுக்கோட்டை சாலை, கலப்பக்காடு சாலை, பேராவூரணி சாலை, தாலுக்கா அலுவலக சாலை, பழைய ஆஸ்பத்திரி சாலை, பெரிய பள்ளிவாசல் வழியாக வீரமாகாளியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன.
இதையும் படிங்க: முன்பக்க டயர் வெடித்து கோர விபத்து.. சாலையோர புளிய மரத்தில் மோதிய தனியார் பேருந்து.. 25 பேர் படுகாயம்!