புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அரசு அலுவலர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதாப்குமார் பேசுகையில், ”அரசானது வெளிப்படையான நிர்வாகத்தை பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு செயல்பட்டுவருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட தகவல்களை அலுவலர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும். குறிப்பாக அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு மனுக்கள் 53 வரப்பெற்று அதன் மீது இன்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து முழுமையாக தெரிந்துகொண்டு தகவல்களை வழங்கிட வேண்டும். மேலும் இந்த விழிப்புணர்வு கூட்டத்தின் வாயிலாக அலுவலர்கள் வருங்காலத்தில் எவ்வாறு தகவல்களை கொடுக்க வேண்டும் போன்ற பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது” என்றார்.
இதையும் படியுங்க: 'தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான அடிப்படைப் பணிகள் நிறைவு'