புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகள் உரிமை மற்றும் மறுவாழ்வு மையம் மாவட்ட தலைவர் அசினா தலைமையில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மனு அளித்தனர்.
திருநங்கைகள் அளித்த குறித்த மனுக்களில், ’எங்களுக்குச் சொந்தமாக வீடுகள் இல்லை. அதனால் வாடகை வீட்டில் வசித்துவருகிறோம். வறுமை, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் வீட்டு வாடகையைக் கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மேலும் சிலர் நாங்கள் திருநங்கைகள் என்பதால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கின்றனர்.
எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கபடாததால் நாங்கள் அவதியுற்று வருகிறோம்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவிற்கு உட்பட்ட லேனா விலக்கு பகுதி அருகே திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வீட்டுமனையும் வழங்கவில்லை. எனவே,
உடனடியாக தங்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக, திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் தங்க அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் சிலர் அதை ஆக்கிரமித்து வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வரலாற்றுப் புகழ்பெற்ற பாண்டுரு காதி அஞ்சல் உறை குறித்த சிறப்பு நிகழ்ச்சி!