புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கடலோரப் பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, மீமிசல், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பேரிடர் மைய கட்டடங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர் ஆய்வுசெய்தார்.
அதன்பின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில், நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறியதாவது, "கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துறை வாரியாக அரசு வழங்கியுள்ள புயல் பாதுகாப்பு வழிமுறைகளை, தொடர்புடைய அலுவலர்கள் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளாக 77 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் இடங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைத்து பராமரிக்க 371 பள்ளிக் கட்டடங்கள், 116 புயல் பாதுகாப்பு மையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் தங்கும் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் போன்ற அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 11 உயர் அலுவலர்கள் தலைமையில் 114 நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாகப் பணிபுரிந்துவருகின்றனர்.
இதேபோன்று அனைத்து துணை ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள் தலைமையிலான அலுவலர்கள் தொடர்புடைய வட்டங்களிலும் பணிபுரிந்துவருகின்றனர்.
மாவட்டம் ழுமுவதும் பொதுமக்களிடையே புயல் பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், மழைநீர் தேங்கும் வரத்து வாய்க்கால்கள் கண்டறியப்பட்டு அடைப்புகள் சீர்செய்யப்பட்டு மழைநீர் தடையின்றிச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேவையான மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தடையின்றி மின்விநியோகம் வழங்கவும் மின்தடை தொடர்பான புகார்களை உடனுக்குடன் சரிசெய்ய மின்சாரத் துறையின் சார்பில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மின்விநியோகம் தொடர்பான விவரங்களுக்கு 04322 221853 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9445853891 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தகவல்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222207 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.