புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (National Commission for Protection of Child Rights) உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "என் மண், என் மக்கள் என்ற நோக்கில் செயல்படும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆலோசனைப்படி, வாக்குச்சாவடிதோறும் மக்களை சந்தித்து 'நாட்டுக்காக மோடி நமக்காக மோடி' என்ற பெயரில் பிரதமரின் ஒன்பது ஆண்டு சாதனையை எடுத்துக் கூற உள்ளோம்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் நடவடிக்கையால் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கடந்த நூறு நாட்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். சென்னை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தவறான சிகிச்சையால் கை பறிபோன விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்குகளில் இதுவரை 14 ஆயிரம் குழந்தைகளுக்கு நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி... இவர் தான் பர்ஸ்ட் தெரியுமா?
தமிழ்நாட்டில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் நடவடிக்கையால் இதுவரை தமிழ்நாட்டில் 30 வழக்குகளில் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் போக்சோ வழக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலமாக பல்வேறு ஆலோசனைகள் அரசிற்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே, அதை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.
நான் அங்கு ஆய்வு செய்து உண்மையான அறிக்கையை ஆளுநர், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் மத்திய அரசிற்கு அறிக்கை கொடுத்து விட்டேன். இந்த விவகாரம் என்பது ஆளுமைகளுக்குள் நடந்து வருகிறது. எனவே, இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் என்ற முறையில் நான் பதில் அளிக்க முடியாது" என தெரிவித்தார்.
முன்னதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், குழந்தைத் திருமண விவகாரத்தில் இருவிரல் பரிசோதனை நடைபெற்றது என்ற குற்றச்சாட்டுக்கு முன்னுக்குப் பின் முரணான பதிலை அளித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 234 தொகுதி நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் விஜய்.. புதிய திட்டம் என்ன?