இதுகுறித்து, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் பயனடையும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். இதன்படி சுமார் 150 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நிலநீர் வல்லுநர்கள், நீர் பகுப்பாய்வாளர்கள் கொண்ட 52 சிறப்பு ஆய்வுக் குழுக்கள் நிறுவப்பட்டு, மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
70 முதல் 80 சதவிகிதம் குடிநீர்
இச்சிறப்பு ஆய்வு குழுக்கள் திட்ட உருவாக்க அறிக்கையின்படி வடிவமைக்கப்பட்ட குடிநீர் அளவு அனைத்து தரைநிலை, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கும் செல்வது, குடிநீரின் தரம், நீரேற்று இடைவெளிகள்
ஆகியவற்றின் நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தவும், குடிநீர் வழங்கல் குறித்து சம்மந்தப்பட்ட பொதுமக்களிடம் நேரடி தொடர்பு கொள்ளவுள்ளனர்.
அதனடிப்படையில் புதுக்கோட்டை ஆலவயலில் அமைந்துள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் அமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. சேதமடைந்த பகுதிகள் பார்வையிட்டு, அக்குழாய்களை விரைவில் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் தற்பொழுது 70 முதல் 80 சதவீதம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
மீதமுள்ள 20 சதவீத குடிநீர் மட்டுமே ஓரிரு காரணங்களால் தடைப்பட்டுள்ளது. விரைவில் இதனையும் சரிசெய்து, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் 16 லட்சம் பொதுமக்களுக்கும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொன்னமராவதி பகுதிக்கு ஏற்கனவே 8 லட்சம் லிட்டர் குடிநீர் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது” என்றார்.